இனி வந்தே பாரத் ரயிலில் முழுக்க சைவம்தான்; கொண்டுப்போகவும் கூடாது - முழு விவரம் இதோ..
வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு சமைக்கப்படாது என இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது.
வந்தே பாரத்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் மேலும் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது.
இண்டர்நெட், குளிர்சாதன வசதி, எல்.இ.டி டிவி போன்ற சேவைகளோடு, 24 மணி நேரமும் உணவு குடிநீர் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. கூடுதலாக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட உள்ளது. இதில் சைவம் அசைவம் என இருவகை உணவுகள் வழங்கப்படுகிறது.
அசைவத்திற்கு தடை
தூய விரதம் இருப்பவர்கள், கோவில்களுக்கு செல்பவர்கள் ரயில்களில் வழங்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து கத்ரா வரை இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணிகளுக்கு சைவ உணவை மட்டுமே வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அந்த ரயிலின் பேண்டரியில் அசைவ உணவு தயாரிக்க அனுமதி இல்லை.
அங்கு பணிபுரியும் பணியாளர்களும் சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், பயணிகளுக்கு பிரத்தியேகமாக சைவ உணவை வழங்கும் இந்தியாவின் முதல் ரயில் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.