திமுக அரசு தமிழ்நாட்டை தனி தீவாக மாற்றி வருகிறது - வானதி சீனிவாசன் காட்டம்
திமுக அலை எங்கு வீசுகிறது என 2026 தேர்தலில் பார்ப்போம் என வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.
வானதி சீனிவாசன்
பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் இன்று(22.12.2024) கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் பேசிய அவர், " இன்று நடைபெற்ற திமுகவின் செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டி பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புயல் பாதிப்பிற்கான நிவாரணம் வழங்கவில்லை, டங்ஸ்டன் எடுக்க பாஜக துணை நிற்கிறது என பல பொய்யான குற்றச்சாட்டுகள் அதில் உள்ளன.
நவோதயா பள்ளி
மத்திய அரசின் திட்டத்திற்கு முதலில் ஒப்புதல் வழங்கிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தும் போது மாநில உரிமை என பல்வேறு பொய்களை கூறி திட்டத்தை எதிர்த்து வருகிறது இந்த திமுக அரசு.
விஸ்வகர்மா யோஜனா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் என கூறி எதிர்ப்பு தெரிவித்து விட்டு, இப்போது அதே திட்டத்தை கைவினை கலைஞர்கள் திட்டம் என அமல்படுத்துகிறார்கள். நவோதயா பள்ளிகளில் இந்தி கட்டாயம் இல்லை என மத்திய அரசு கூறிய பிறகும் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க மறுக்கின்றனர்.
மருத்துவ கழிவு
இதன் மூலம் வருங்கால தலைமுறைக்கு மிகப்பெரிய துரோகத்தை திமுக அரசு செய்து வருகிறது. திமுக அரசு தங்களது சுய லாபத்துக்காக தமிழ்நாட்டை தனி தீவாக உருவாக்கி வருகிறது.
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதில் இரண்டு பூஜ்ஜியங்களை நீக்கினால் உள்ள தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. திமுக அலை எங்கு வீசுகிறது என 2026 சட்டமன்ற தேர்தலில் பார்ப்போம்.
கேரளாவிலிருந்து மருத்துவ கழிவு கழிவுகளை தமிழகத்தில் கொட்டும் பிரச்னை நெல்லை போன்று கோவை மாவட்டத்திலும் உள்ளது. இங்குள்ள மாவட்ட நிர்வாகம் இதை மிக எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும். தமிழகம் கழிவுகளை கொட்டும் குப்பைத்தொட்டி அல்ல" என பேசியுள்ளார்.