வடக்கு தெற்கு என முதல்வர் ஸ்டாலின் பிரிவினைவாதம் பேச கூடாது - வானதி சீனிவாசன் கண்டனம்
முதல்வர் ஸ்டாலின் பிரிவினைவாதம் பேச கூடாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை நூலகம்
கோவை அனுப்பர்பாளையத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட இருக்கும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்டாலின்
இதன் பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், "50 ஆண்டுகளுக்கு முன் மற்ற மாநிலங்களும், தமிழ்நாடும் எப்படி இருந்தது என ஒப்பிடுங்கள். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என சொல்வார்கள். உண்மையில் தெற்கு தான் வடக்குக்கும் வாரி வழங்குகிறது" என பேசினார்.
இந்த நிகழ்வில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு முதலவர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
வானதி சீனிவாசன்
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழக அரசு சார்பில் கோவை தெற்கு தொகுதியில் பிரம்மாண்டமான முறையில் நூலகம் அமைக்கப்படுவதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
வடக்கு, தெற்கு என பிரிவினைவாதம் பேசி மக்களை திசை திருப்பாமல், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு முதல்வர் துணை நிற்க வேண்டும். கோவையை கவர்ந்துவிட வேண்டும் என முதல்வர் செயல்படுகிறார். 2026ல் அதற்கு பதில் கிடைக்கும்" என பேசினார்.