உதயநிதிக்கு கட்டுப்பட்டு நடக்கும் துரைமுருகன் - வானதி ஸ்ரீனிவாசன்

Udhayanidhi Stalin Rahul Gandhi BJP Durai Murugan Vanathi Srinivasan
By Karthikraja Jun 12, 2024 04:48 AM GMT
Report

வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம் என்ற ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வானதி சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

ராகுல் காந்தி

வாரிசு அரசியலுக்கு எதிராக பாஜக பேசிவிட்டு தற்போது அமைச்சரவையில் வாரிசுகளுக்கு இடம் அளிக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

rahul gandhi

“கட்சிக்காக பாடுபட்டவர்கள், தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு பதவி வழங்குவதையே வாரிசு அரசியல் என விமர்சித்தார் மோடி. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையிலேயே வாரிசுகள் நிரம்பியுள்ளன. அவரின் பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்?” என ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.

மேலும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள வாரிசுகளின் பட்டியலையும் வெளியிட்டார்.

20 வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம் - பட்டியலிட்டு விமர்சித்த ராகுல் காந்தி

20 வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம் - பட்டியலிட்டு விமர்சித்த ராகுல் காந்தி

வானதி சீனிவாசன்

இது தொடர்பாக தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

vanathi srinivasan

"கட்சித் தலைமைக்கும், ஆட்சித் தலைமைக்கும் ஒரு குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் வரமுடியாது என்ற நிலை தான் வாரிசு அரசியல்.

அரசியலில் இருக்கும் ஒருவரது மகனோ, மகளோ, குடும்பத்தினரோ அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்ல முடியாது.

காங்கிரஸ் கட்சிக்குள் நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் முடிவெடுக்க முடியுமா என்பதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும்.

நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி அமைச்சரவையில், 71 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அவர்களில் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டுள்ள நேரு குடும்ப இளவரசர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "பரம்பரை பரம்பரையாக போராட்டம், சேவை, தியாகம் தான் எங்கள் மரபு என்று சொல்வோர், 'அரசு குடும்பத்தில்' வாரிசுகளுக்கு இடம் கொடுத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்" என விமர்சித்திருக்கிறார்.

முதலில் 'வாரிசு அரசியல்' என்றால் என்ன என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் இருக்கும் ஒருவரது மகனோ, மகளோ, குடும்பத்தினரோ அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. வாக்களிக்கும் தகுதி கொண்ட இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் போட்டியிடலாம். எந்தப் பதவிக்கும் வரலாம். இது இந்திய அரசியலமைப்பு சட்டம் அளித்திருக்கும் அடிப்படை உரிமை.

ஆனால், ஒரு குடும்பத்தினர் ஒரு கட்சியையோ, அரசையோ தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருப்பது தான் வாரிசு அரசியல். அதை தான் பாஜக எதிர்க்கிறது. இந்தியா விடுதலை அடைந்து, நமக்கென்ன ஒரு அரசை உருவாக்கிக் கொண்ட 1947-ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 77 ஆண்டுகளாக பண்டிட் ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜிவ் காந்தி, அவரது மனைவி சோனியா காந்தி, அவர்களது மகன் ராகுல் காந்தி என்று ஒரு குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் தான் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருப்பார். அல்லது நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமரை கட்டுப்படுத்தும் இடத்தில் இருப்பார்கள்.

2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மன்மோகன் சிங் பொம்மை பிரதமராக இருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த 10 ஆண்டுகளும் உண்மையிலேயே அதிகாரம் செலுத்தியது சோனியா காந்தி, ராகுல் காந்தி என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான். இந்த ஜனநாயகத்திற்கு நேர் எதிரான பாசிசம் தான் வாரிசு அரசியல். குடும்ப அரசியல். இதைத்தான் பாஜக எதிர்க்கிறது. இனியும் எதிர்க்கும்.

இதுபோல பாஜகவில் நடக்கிறதா? 1951-ல் ஜன சங்கம் தொடங்கப்பட்டது முதல் 1980-ல் அது பாஜகவை மாறியது தொடங்கி இன்று வரை, பாஜகவின் தலைவர் யார் என்பது அவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை யாருக்கும் தெரியாது.

பாஜக தேசியத் தலைவராக இருந்தவர்களின் வாரிசுகள் யாரும் தலைவர் பதவிக்கு வந்ததில்லை. அடுத்த பாஜக தலைவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், காங்கிரஸில் அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு யார் தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் வாரிசு அரசியல். இதைத்தான் பாஜக எதிர்க்கிறது.

1984-ல் இந்திராகாந்தி படுகொலைக்கு பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில் 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு நடைபெற்ற 1989, 1991, 1996, 1998, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய 10 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையை பெறவில்லை. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு நடந்த 1991 மக்களவைத் தேர்தலில்கூட காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 1989க்கு பிறகு காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்தே வருகின்றனர்.

இதற்கு அக்கட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதே காரணம். சோனியா குடும்பத்திற்கு அடிமையாக இருக்க பிடிக்காமல் தான், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரத்தில் சரத் பவார், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தனிக்கட்சி தொடங்கி காங்கிரஸ் கட்சியையே தோற்கடித்தனர். தனித்து கட்சி தொடங்கி காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கும் அளவுக்கு வல்லமை பெற்ற இந்த தலைவர்களால், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து சாதிக்க முடியாமல் போனதற்கு ஒற்றைக் குடும்பத்தின் ஆதிக்கம் தான் காரணம். இதுதான் வாரிசு அரசியல். குடும்ப அரசியல். இதைதான் பாஜக எதிர்க்கிறது. இனியும் எதிர்க்கும்.

தற்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகி இருக்கும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அவர்களையும் வாரிசு அரசியல் பட்டியலில் சேர்த்திருக்கிறார் ராகுல் காந்தி. அவர் கல்லூரியில் படிக்கும் காலம் முதலே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பில் ஈடுபட்டு அரசியலுக்கு வந்தவர். ராகுல் காந்தியைப் போல பிரதமர் இல்லத்தில் பிறந்தவர் அல்ல. படிப்படியாக உழைத்து தனது திறமையால் பாஜக தேசியத் தலைவர் என்ற உயரத்தை எட்டியிருக்கிறார்.

49 ஆண்டு காலம் திமுக என்ற கட்சியை தனது பிடிக்குள் வைத்திருந்த கருணாநிதி மறைந்ததும், அவரது மகன் மு.க. ஸ்டாலினிடம் அக்கட்சி சென்று விட்டது. மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சரத் பவர், உத்தவ் தாக்கரே என்று 'இண்டி' கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளை ஒரு குடும்பத்தினர் தான் கட்டுப்படுத்துகின்றனர். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி இருக்கிறதோ, இல்லையோ அவர்தான் அக்கட்சியின் அடுத்த தலைவராக முடிகிறது. ஆட்சி அமைத்தல் முதலமைச்சராக முடிகிறது.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக, எம்.பி.யாக இருந்து, அக்கட்சியின் அதிகாரம் உண்மையிலேயே மல்லிகார்ஜுன கார்கேவிடம் இருந்தால் அது வாரிசு அரசியல் அல்ல. திமுக தலைவராக துரைமுருகனும், முதலமைச்சராக ஆ.ராசாவும் இருந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக, அமைச்சராக மு.க. ஸ்டாலின் இருந்தால் அது வாரிசு அரசியல் அல்ல. ஆனால், அதற்கு நேர் மாறாக 'கருணாநிதி - ஸ்டாலின் - உதயநிதி' அதாவது 'தந்தை - மகன் - பேரன்' என்று கட்சியை, ஆட்சியை கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அண்ணா காலத்திலிருந்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள் கூட, உதயநிதிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது. இந்த அவலத்தை தான் பாஜக எதிர்க்கிறது.

காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியுமா என்பதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும். ஏனெனில், மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக்கி விட்டு, வேட்பாளர் தேர்வு முதல் அனைத்து முடிவுகளையும் சோனியா, ராகுல், பிரியங்கா தான் எடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு போன்ற முக்கிய கூட்டங்களில் சோனியா, ராகுல் பிரியங்கா என்று குடும்பத்தினர் தான் அமர்ந்திருக்கின்றனர். இது போன்ற காட்சியை ஒரு நாளும் பாஜகவில் பார்க்க முடியாது.

முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு கட்சியை, குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை அடிமைகளை போல நடத்திக் கொண்டிருக்கும் ஒருவர், பாஜகவில் வாரிசு அரசியல் இருப்பதாகக் கூறுவது, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவது போன்றது. பாஜகவை நோக்கி வாரிசு அரசியல் என்று ராகுல் காந்தி வைக்கும் விமர்சனத்தை பார்த்து மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.