ஜனநாயக வழியில் போராடும் பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைப்பதா?வானதி கேள்வி!
ஜனநாயக வழியில் போராடும் பெண்களை ஆட்டு மந்தையுடன் அடைப்பதா?என வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
திமுக அரசு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அங்குப் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாட்டையும் தாண்டி, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவியின் புகாரில் குறிப்பிட்டுள்ள 'யார் அந்த சார்?" என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
யாரோ முக்கியப் புள்ளி ஒருவரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுக்கால திமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய பிறகுதான் கைது செய்வார்கள்.
ஆனால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூட திமுக அரசு அனுமதிப்பதில்லை. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு,
வானதி சீனிவாசன்
பாஜக மகளிரணி சார்பில் மதுரையிலிருந்து சென்னை வரை பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மதுரையில் நீதிக்காக அணி திரண்ட பாஜக மகளிரணியினரை காவல் துறையினர் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர்.அங்கு நூற்றுக்கணக்கான ஆடுகளையும் அடைத்து வைத்துள்ளனர்.
இது திமுக அரசின் கொடூர மனநிலையைக் காட்டுகிறது. போராடும் உரிமை உள்ள நாடுதான் ஜனநாயக நாடாக இருக்க முடியும். போராடுபவர்களை அதுவும் பெண்களை ஆட்டு மந்தைகளுடன் அடைத்து வைப்பது திமுக அரசின் அதிகார ஆணவத்தை, குரூர மனப்பான்மையைக் காட்டுகிறது.
இதற்குத் தமிழ்நாட்டு மக்கள் சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.