வலிமை அப்டேட் எப்படி? மைதானத்தில் நடந்த சுவாரசியம்! அஸ்வின் பகிர்ந்து கொண்ட அந்த தகவல்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் மைதானத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும், சென்னை ரசிகர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது குறித்து தன்னுடைய யூடியூப் சேனல் வீடியோவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறுகையில், முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சென்னை ரசிகர்களின் பங்கு மிகப்பெரியது. அவர்கள் செய்த சின்ன சின்ன விசயங்கள், எங்களுக்கு பெரிய உத்வேகத்தை அளித்தது, பென் ஸ்டோக்ஸ் பிறந்தநாள், மயங்க் அகர்வால் பிறந்தநாள் என ரசிகர்கள் அதகளப்படுத்திவிட்டனர்.
நான் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் தல அஸ்வின்! அஸ்வின்! என்றார். நான் என்ன என்று கேட்ட போது, வலிமை அப்டேட் எப்படி? என்றார், எனக்கு ஒன்றும் புரியவில்லை, அடுத்ததாக கூகுள் செய்து பார்த்து போது, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மறுநாள் மொயின் அலி என்னிடம் வந்து, வாட் இஸ் வலிமை? என்றார், அப்போது தான் புரிந்தது அவரிடம் இதே கேள்வியை கேட்டுள்ளார்கள் என்று. மாஸ்டர் சூப்பர், இங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட் கேட்டதெல்லாம் அவுட்ஸ்டான்டிங் என தெரிவித்துள்ளார்.