ஹீரோ அடிவாங்குற மாதிரி தான் இருக்கும்..ஆனா ஒரே அடி தான்...வைத்தியலிங்கம் அதிரடி!!
சென்னை உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் கட்சி பெயர், கொடி, லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
கொடி இல்லாமல் ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி தரர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓபிஎஸ் கட்சி கொடி, பெயர், லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது.
இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு மனுவை ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், ஓ.பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்.
ஓபிஎஸ் ஹீரோ மாதிரி
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கத்திடம், நீதிமன்றத்தில் தங்கள் அணிக்கு தொடரந்து பின்னடைவாக இருப்பது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், ஹீரோ வில்லனிடம் அடிவாங்கிக்கொண்டே இருப்பார், கடைசியில் ஹீரோ ஒரே அடியில் வில்லனை வீழ்த்துவார் என்று கூறி, அதை போல கடைசியில் ஓபிஎஸ் வீழ்த்துவார் என கூறினார்.
தாங்கள் கட்சி வேட்டி கட்டுவதை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்த வைத்திலிங்கம், நீதிமன்ற உத்தரவிற்காக தான் தங்கள் கார்களில் கட்சி கொடி ஏற்றவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே ஓபிஎஸின் நிலைபாடு என்றார்.