மதிமுக எம்.பி விபரீத முடிவு; எம்எல்ஏ.வாக நிற்க வைக்க எண்ணினேன் - வைகோ உருக்கம்!
ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
தற்கொலை முயற்சி
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து கட்சியின் தார்மீக அடிப்படையில் எம்.பி. கணேசமூர்த்தி தேர்தலில் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. தற்போது, கணேசமூர்த்தி உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ உள்ளிட்டோர் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ " கணேசமூர்த்தி நாடாளுமன்றத்தில் 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டார். இந்த முறை கட்சியில் அனைவரும் துரை வைகோவை அனுப்ப வேண்டும்.
வைகோ உருக்கம்
கணேசமூர்த்திக்கு அடுத்த வாய்ப்பில் பார்த்துக் கொள்ளலாம் என்றனர். நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஓட்டெடுப்பு எல்லாம் நடத்தப்பட்டது. ‘இரண்டு சீட்டுகள் வாங்குங்கள். ஒன்றை கணேசமூர்த்திக்கும், ஒன்றை துரை வைகோவுக்கும் கொடுப்போம் என்று கூறினார்கள்.
அதற்கு வாய்ப்பில்லாமல் சென்றால், சட்டசபை தேர்தலில் அவரை எம்.எல்.ஏ-வாக நிற்க வைக்கலாம் என்று எண்ணினேன். இல்லையெனில் அதை விட பெரிய பதவியை ஸ்டாலினிடம் கேட்டு வாங்கி தரலாம் என்று நினைத்தேன். சட்டமன்ற தேர்தல் வரும்போது அவருக்குண்டான காயம் ஆறிவிடும். அதன் பிறகு கூட என்னிடம் பிரியமாக பேசினார். வீட்டிலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் நலமாகவே இருந்துள்ளார்.
இதனிடையே தென்னை மரத்துக்கு போடும் நஞ்சினை கலந்து குடித்திருக்கிறார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ‘50-50 வாய்ப்புள்ளது, 2 நாள்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். நம்பிக்கையுடன் இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.