மீண்டும் அரசியல் களத்தில் வடிவேலு - விஜய்க்கு எதிரான பிரசாரத்துக்கு ஆயத்தம்?
திமுக பொதுக்கூட்டத்தில் வடிவேலு மேடையேறியது கவனம் பெற்றுள்ளது.
திமுக பொதுக்கூட்டம்
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் வடிவேலு. கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு எதிராக பேசியிருந்தார்.
ஆனால் அந்த தேர்தல் முடிவில் அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவராக தேமுதிக விஜயகாந்த் பொறுப்பேற்றார். இதன்பின், 10 ஆண்டு காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் வடிவேலு வெளியுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
களமிறங்கும் வடிவேலு?
இதனையடுத்து 2021ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த 'மாமன்னன்' படத்தில் வடிவேலு மீண்டும் களமிறங்கினார். இந்நிலையில், கடந்த மாதம் 27-ந் தேதி சென்னை யானைக்கவுனியில் நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய வடிவேலு,
"2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார்" என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் அழைப்பின்பேரில் நடிகர் வடிவேலு இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
எனவே, வருகிற சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களமிறங்குவதால், விஜய்க்கு எதிரான தேர்தல் பிரசாரத்திற்கு வடிவேலுவை பயன்படுத்தலாமா? என்று திமுக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.