நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - ஹேம்நாத் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

V. J. Chitra
By Nandhini Aug 02, 2022 12:31 PM GMT
Report

நடிகை சித்ரா மரணம்

சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில், இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.

ஹேம்நாத் திடுக்கிடும் தகவல்

ஹேம்நாத் 60 நாட்கள் சிறையிலிருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் சமீபத்தில் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். அதன்படி சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தன் மீதான குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றம் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று சித்ராவின் தந்தை காமராஜ் இடைக்கால மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக சித்ராவின் தந்தை பதிலளிக்க உத்தரவிட்டனர்.

V. J. Chitra case - hight court

ஹேம்நாத் மனு தள்ளுபடி

இந்நிலையில், நடிகை சித்ரா மரண வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய மறுத்தனர்.

ஹேம்நாத் மீது குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தனர். இதனையடுத்து, குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரிய ஹேம்நாத் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.