'எலி வளை' தொழிலாளர்களும், ஆஸ்திரேலிய அர்னால்டும் - சுரங்கத்திலிருந்து 41 பேரை மீட்ட ஹீரோக்கள்!

India Uttarakhand Accident World
By Jiyath Nov 30, 2023 07:56 AM GMT
Report

சுரங்க விபத்து 

உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி பகுதியில், சில்க்யாரா முதல் பர்கோட் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென ஏற்பட்ட மண்சரிவால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

இதனையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழுவினர் ஈடுபட்டனர். தொடர்ந்து 17வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்புப்பணியில் சில தனியார் நிறுவனங்களும், ஊழியர்களும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர்.

தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 5 ராட்சத இயந்திரங்கள் பழுதடைந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆகர் இயந்திரம் 5 நாள்களில் 47 மீட்டர் தூரம் வரை துளையிட்டது. பின்னர், அந்த இயந்திரமும் உடைந்து சிக்கிக்கொண்டது.

உலகின் பணக்கார இளவரசி..! அரண்மனை வாழ்க்கை, சொந்தமாக பேஷன் பிராண்ட் - சொத்துமதிப்பு..?

உலகின் பணக்கார இளவரசி..! அரண்மனை வாழ்க்கை, சொந்தமாக பேஷன் பிராண்ட் - சொத்துமதிப்பு..?

'எலி வளை'

இந்நிலையில் மீதமுள்ள 13 மீட்டருக்கு `எலி வளை' தொழிலாளர்கள் மூலம் துளையிடலாம் என முடிவெடுக்கப்பட்டு, டெல்லியிலிருந்து 20க்கும் மேற்பட்ட எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

4 அடி அளவில் சிறிய குழிகளை, சின்னச் சின்ன உபகரணங்களைக்கொண்டு கையால் தோண்டி நிலக்கரி எடுப்பதையே`எலி வளை சுரங்கப் பணி’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால் கடந்த 2014ம் ஆண்டு இந்த எலி வளை சுரங்கப் பணிக்குத் தடைவிதிக்கப்பட்டது. ஏனெனில், இந்த முறையால் ஏராளமான உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இருந்தும் வடகிழக்கு மாநிலங்களிலுள்ள சில தொழில் நிறுவனங்கள் சட்டவிரோதமாக இந்த வகைச் சுரங்கப் பணிகளைச் செய்துவருகின்றன.

இந்நிலையில் டெல்லியிலிருந்து வந்த எலி வளை தொழிலாளர்கள் திங்கள் இரவில் பணியைத் தொடங்கி 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தூரம் துளையிட்டு முடித்தனர். இதன் மூலம் சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு ஓரே நாளில் இந்தியாவின் சாதனை நாயகர்களாக எலி வளைத் தொழிலாளர்கள் மாறினார். எலி வளை தொழில் தடை செய்யப்பட்டிருந்தாலும், உத்தராகண்டில் ஏற்பட்ட நெருக்கடியால், இதைப் பயன்படுத்தியிருக்கிறோம்' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அர்னால்டு டிக்ஸ்

இந்த மீட்புப்பணிக்காக பல்வேறு திட்டங்களை மீட்புக்குழுவினருக்கு வகுத்துக் கொடுத்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்டு டிக்ஸ். பொறியாளர், புவியியலாளர், பேராசிரியர், வழக்கறிஞர் என்று பன்முகம் கொண்டவர் இவர் நிலத்தடி கட்டுமானங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.

அர்னால்டு டிக்ஸ் இந்த மீட்புப்பணியில் அதிக கவனம் பெற்றார். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சுரங்கப் பாதைகள் மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராக அர்னால்டு இருந்துவருகிறார். கட்டுமான ஆபத்துகள், அதில் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களில் நிபுணத்துவம் பெற்றிருப்பதால், இந்திய அரசு. அர்னால்டின் உதவியை நாடியது.

அதற்காக இந்தியா வந்தவர், பல்வேறு திட்டங்களையும் மீட்புக்குழுவினருக்கு வகுத்துக் கொடுத்தார். இந்த மீட்புப் பணிகள் நடைபெறும்போது பேட்டியளித்த அர்னால்டு "இது எளிதான வேலை கிடையாது. இன்று காப்பாற்றிவிடுவோம், நாளை காப்பாற்றிவிடுவோம் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் 41 பேரும் காயமின்றி மீட்கப்படுவார்கள்'' என்கிறார். அதேபோல் மிக வேகமாகவே இந்த மீட்புப்பணிகள் முடிவடைந்து 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.