இந்தியரின் முரட்டு வியாபாரம் - ரூ.300 போலி நகையை ரூ.6 கோடிக்கு வாங்கிய அமெரிக்க பெண்!
அமெரிக்க பெண் ஒருவர் ரூ.6 கோடிக்கு போலி நகையை வாங்கி ஏமாந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி நகைகள்
அமெரிக்காவை சேர்ந்த செரிஷ் என்ற பெண்ணுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த கௌரவ் சோனி என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கௌரவ் சோனி, தான் நகைக்கடை வைத்திருப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 6 கோடிக்கு தங்க நகைகளை செரிஷ் வாங்கியுள்ளார்.
ஆனால், ரூ.300 மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை பஜாரிலிருந்து வாங்கி கௌரவ் சோனி ஏமாற்றி விற்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் அந்த நகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
விசாரணை
அப்போதுதான் அந்த நகைகள் போலியானது என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செரிஷ் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு வந்து கௌரவ் சோனியிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் அவர் இதை மறுத்தததால், அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் உதவியை செரிஷ் நாடினார்.
அவர்களின் ஆதரவுடன் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக இருக்கும் கெளரவ் சோனியை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.