ஒரு மாதத்தில் கையில் பணமிருக்காது - அல்லாடும் அமெரிக்கா
அமெரிக்காவில் ஒரு மாதத்தில் பண கையிருப்பு தீர்ந்து விடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடி
ஜூன் 1க்குள், நாட்டின் செலவுகளுக்கே பணம் இருக்காது, வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது என அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க பார்லிமென்ட் கடன் உச்சவரம்பை உயர்த்தவோ அல்லது இடைநிறுத்தம் செய்யவோ அனுமதிக்கவில்லை எனில் இந்த நிலை ஏற்படலாம் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில், அமெரிக்காவின் கடன்கள் முறையாக அடைக்கப்படும் என்ற முழு நம்பிக்கை ஏற்படுவதற்கு உதவுங்கள். கடைசி நிமிடம் வரை காத்திருந்து, அதன் பின் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவது தொடர்கிறது. இதனால், நமது நாட்டின் வணிகமும், வாடிக்கையாளர் நம்பிக்கையும் பெருமளவு பாதிக்கப்படுகின்றன.
எச்சரிக்கை
குறுகிய கால கடன்களுக்கான வட்டி உயர்வதுடன், அமெரிக்காவின் நம்பகத் தன்மையே கேள்விக்குறியாகிவிடுகிறது. கடன் உச்ச வரம்பை அமெரிக்க பார்லிமெண்ட் உறுப்பினர்கள் உரிய காலத்துக்குள் உயர்த்தவில்லை எனில், அது அமெரிக்க பங்குச் சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் வாயிலாக உலக அளவில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுவிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நிதித் துறை, 31.4 டிரில்லியன்அமெரிக்க டாலர் அளவுக்குக் கடன் வாங்கலாம் என்று ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வரம்பு, கடந்த ஜனவரி 19ம் தேதியே எட்டப்பட்டுவிட்டது. இருப்பினும், ஜூன் வரை, கையிருப்புத் தொகை நீடிக்கும் என ஜேனட் யெல்லன் நம்பிக்கை தெரிவித்தார்.
சவுதி பெண்ணை மன்னித்த இலங்கை தமிழர் : அனோஜனை மன்னிக்கவேண்டும் சவுதி இளவரசர் : மனோ கணேசன் உருக்கமான கோரிக்கை IBC Tamil