ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்..பகிரங்க எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!
ஈரானில் உள்ள அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் தாக்குதல்
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஈரானிலிருந்து இஸ்ரேலுக்கு நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது இஸ்ரேல், இன்று அதிகாலை முதலாகக் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஏற்கனவே, இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற தனிப்பட்ட அமைப்புகளுக்கும் இடையே நடந்த மோதல் ஈரான் வரை விரிவடைந்த நிலையில், ஈரானைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என இஸ்ரேல் நடத்திவரும் எதிர்த்தாக்குதல் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரான் அணு உலைகள், எண்ணெய் கிடங்குகள் மற்றும் அணு உலைகள் மீது எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை
இது குறித்து வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் “ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான இஸ்ரேல் தாக்குதல்கள், ஒரு தற்காப்புக்கான பயிற்சி” என்று கூறியுள்ளார்.
முன்னதாக அக்டோபர் 1 அன்று இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது. இது அமெரிக்காவிற்கு முன்பே தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதில் அமெரிக்கத் தலையீடு இல்லை என விளக்கம் அளித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும் சூழலையும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.