பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் - இஸ்ரேலில் உச்சகட்ட பரபரப்பு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம், ஈரான் புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவை அங்கு வைத்தே வான்வெளி தாக்குதல் நடத்தி இஸ்ரேல் தீர்த்து கட்டியது.
பெஞ்சமின் நெதன்யாகு
ஹமாஸை முற்றிலும் ஒழிக்காமல் போரை நிறுத்தப்போவதில்லை என்ற முடிவில் உள்ள இஸ்ரேல், சில நாட்களுக்கு முன் தெற்கு காசாவில் இருந்த ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை கொன்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதற்கு பழி வாங்கும் விதமாக, இஸ்ரேலின் தெற்கு ஹைஃபா பகுதியில் சிசேரியா என்ற இடத்தில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் 3 ட்ரோன்கள் வந்துள்ளது. இதில் 2 ட்ரோன்கள் இஸ்ரேல் வழி மறித்து தாக்கியளித்த நிலையில் ஒரு ட்ரோன் நெதன்யாகுவின் வீட்டின் மீது விழுந்து வெடித்துள்ளது.
ஆனால் அப்போது நெதன்யாகுவோ அவரது மனைவியோ அந்த வீட்டில் இல்லை. இதனால் தாக்குதலில் யாருக்கும் காயமில்லை. பிரதமர் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இஸ்ரேலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.