ஹமாஸை வீழ்த்த மனிதாபிமானமற்ற திட்டம் - காசா மக்களை பட்டினி போட உள்ள இஸ்ரேல்
ஹமாசை வீழ்த்த ஜெனரல்ஸ் திட்டத்தை இஸ்ரேல் கையிலெடுத்துள்ளது.
ஹமாஸ் தாக்குதல்
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதோடு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமான பொதுமக்கள் உள்பட 1160 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பணயக் கைதிகளாக சிறைப்பிடித்து சென்றனர்.
அதற்கு பதிலடியாக ஹமாஸை அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என ஒரு வருடமாக பாலஸ்தீனம் காசா உள்ளிட்ட பகுதிகளின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஜெனரல்ஸ் திட்டம்
இந்த போரில் 40,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சர்வேதச நாடுகள் போரை நிறுத்த கோரியும் இஸ்ரேல் போரை நிறுத்தும் முடிவில் இல்லை. தற்போது ஹமாஸை வீழ்த்த இஸ்ரேல் மனிதாபிமானமற்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
ஜெனரல்ஸ் திட்டம்(Generals Plan) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி வடக்கு காசாவுக்குள் உணவு, குடிநீர், மருந்து என எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களும் செல்லாமல் அங்குள்ளவர்களைப் பட்டினி போட இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.
10 நாட்கள் கெடு
வடக்கு காசா மக்களுக்கு அங்கிருந்து வெளியேற 10 நாட்கள் கெடு விதிக்கப்படும். இதன் பின் அந்த பகுதி ராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டு எல்லை முற்றிலுமாக மூடப்படும். அங்கு உணவு, குடிநீர், மருந்து என எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களும் அனுமதிக்கப்பட மாட்டாது.
அங்குள்ளவர்கள் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என கருதப்படுவார்கள். இதனால் அங்குள்ளவர்களின் மீது தாக்குதல் நடத்த சர்வதேச சட்டப்படி எந்த தடையும் இஸ்ரேலுக்கு ஏற்படாது. அங்குள்ள மக்கள் ஒன்று வெளியேற வேண்டும் அல்லது பட்டினி இருக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.
இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் பாராளுமன்றத்தில் வெகுவான பாராட்டு கிடைத்துள்ளதால் திட்டத்தை செயல்படுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.