முதல் முறையாக பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை!
அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.
பன்றியின் சிறுநீரகம்
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள வேமவுத் நகரைச் சேர்ந்தவர் ரிச்சர்டு ஸ்லேமன் (62). இவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் போஸ்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
முன்னதாக அவருக்கு 2018ம் ஆண்டு வேறு ஒரு நபரி சிறுநீரகத்தை அவருக்கு பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளில் அந்த உறுப்பு செயலிழந்தது. இதனால் மீண்டும் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதன்பிறகு, இஜெனிசிஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன் ரிச்சர்டுக்கு பொருத்தினர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்து, நோயாளி குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தெரிவித்தது.
மருத்துவர்கள் சாதனை
இதன்படி, நோயாளிகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உறுப்புகளை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாக மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு சில மரபணுக்களை அகற்றவும், மனிதர்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் அதனை மேம்படுத்தவும், குறிப்பிட்ட மனித மரபணுவை சேர்க்கவும் அந்த நிறுவனம் பன்றியின் மரபணுவில் சில மாற்றங்களை செய்துள்ளது.
மேலும், மனிதர்களை பாதிக்கக்கூடிய வகையில் பன்றியின் பாகங்களில் இருந்த வைரஸ்களையும் செயலிழக்க செய்தனர். இந்நிலையில், அந்த பன்றியின் சிறுநீரகத்தை குரங்குகளுக்கு பொருத்தி சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
அந்த சோதனையில் குரங்குகள் சுமார் 176 வாழ்ந்துள்ளனர்.
அதிலும் ஒரு குரங்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்வாழ்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதன்பிறகே அத்தகைய சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.