50 வருஷம்.. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய தனியார் விண்கலம் - இதுதான் முதல்முறை..
ஒடிசியஸ் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
ஒடிசியஸ் விண்கலம்
கடந்த 2023 ஆண்டு இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தை அடைந்தது. இந்திய லேண்டர் முதல் முறையாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த இன்டியூடிவ் மெஷின்ஸ் (Intuitive Machines) என்ற தனியார் நிறுவனம் நிலவின் தென்துருவத்தை ஆராய ஒடிசியஸ் (Odysseus) என்ற விண்கலத்தை உருவாக்கியது. இது, ஃப்ளோரிடா, கேப் கேனவரிலில் இருந்து ஏவப்பட்டு சுமார் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
நோக்கம் என்ன?
அந்த இடம் ஒப்பீட்டளவில் தட்டையானது மற்றும் அதிகமான மலைகள், பாறைகளால் சூழப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது. இதில், நாசாவின் 6 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நிலவு குறித்து ஆய்வு செய்யப் பல வகை ரோபோக்கள் இருக்கிறது. முதற்கட்டமாக லேசான சிக்னல்கள் வந்துள்ள நிலையில், இதுவே மிகப் பெரிய வெற்றி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிலவின் தென்பகுதியில் நீர் மற்றும் அதிர்வெண் அலைகளின் இருப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏவப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடைசியாகக் கடந்த 1972இல் அமெரிக்கா அதன் அப்பல்லோ 17 மூலம் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. இப்போது சுமார் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனியார் நிறுவனம் மூலம் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது.