நிலவில் சந்திரயான் 3 விண்கலம்: பசிபிக் பெருங்கடலில் வந்து விழுந்தது - ISRO அறிவிப்பு!
சந்திரயான் 3
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய 'சந்திரயான் 3' விண்கலத்தை , LVM3 M4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ (ISRO) . இதனையடுத்து, விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது.
இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. பின்னர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் பல ஆய்வுகளையும் செய்து தகவல்களை கொடுத்தது. தற்போது லேண்டர் மற்றும் ரோவர் செயலிழந்து நிலையிலேயே உள்ளது.
அந்தவகையில் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டபோது, விண்கலம் சரியாக அதன் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, LVM3 M4 ராக்கெட்டின் பாகங்கள், இஸ்ரோவின் கட்டுப்பாட்டுடன் விண்வெளியில் மிதந்துக்கொண்டிருந்தன.
கடலில் விழுந்த பாகம்
இந்நிலையில் LVM3 M4 ராக்கெட்டின் கிரையோஜெனிக் மேல் நிலை, புதன்கிழமை சுமார் 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து, அந்த பாகம் வட பசிபிக் பெருங்கடலில் விழுந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஐநா சபை மற்றும் ஐஏடிசியின் விண்வெளிக் குப்பைகளை அகற்றுவதற்கான பரிந்துரைகளின்படி, ராக்கெட் ஏவப்பட்ட 124 நாட்களில் கிரையோஜெனிக் பாகம் விண்வெளியிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
மேலும், ராக்கெட் தனது பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அதன் பாகங்களை செயலிழக்கச் செய்தல், அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சிக்கான நீண்ட கால பாதுகாப்பு பணிகளை இந்தியா சரியாகச் செய்துள்ளதாகவும் இஸ்ரோ பெருமிதம் தெரிவித்துள்ளது.