நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?
இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் நாமக்கல் மாவட்ட மண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரோ சோதனை
கடந்த 2019ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ (ISRO) அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டு தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த ஜூலை 4ம் தேதி இஸ்ரோவால் சந்திரயான் 3 விண்கலம் நிலவை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
வரும் 23ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. அந்தவகையில் முன்னதாக சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகியவை சரியாக தரையிறங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய நிலவில் உள்ளது போன்ற மண் தேவைப்பட்டது. அந்த மண் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவிடம் (NASA) இருந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கிலோ மண் ரூ.15000 கொடுத்து வாங்க வேண்டியிருந்தது.
இதனால் அந்த வகையான மண் இந்தியாவில் உள்ளதா என்பது பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் அந்த வகை மண் தமிழ்நாடு மாநிலம், நாமக்கல் மாவட்டம், ப. வேலூர் தாலுகா, குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் கிடைப்பது தெரியவந்தது.
நாமக்கல் மண்
இதனைத் தொடர்ந்து அந்த கிராமங்களில் உள்ள மண் மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அந்த மண் நிலவில் உள்ள மண் போல 'அனோர்த்தோசைட்' பாறையைக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 50டன் அளவிற்கு அந்த மண் மற்றும் பாறைகள் பெங்களூருவில் உள்ள, 'இஸ்ரோ' மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு அந்த மண் மகிரிகளை கொண்டு சிறப்பு ஆய்வகம் உருவாக்கப்பட்டு "சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவின் பரப்பில் பத்திரமாக இறக்குவதையும், லேண்டர், ரோவர் ஆகியவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கி சோதித்து பார்த்தனர்.
கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3ல் உள்ள லேண்டர்,ரோவர் ஆகியவை பத்திரமாக தரையிறங்குகிறதா என்பதையும் இஸ்ரோ நாமக்கல்லில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணில் வைத்து சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மண்ணை வைத்து, சந்திரயான் 2 மற்றும் 3 பரிசோதனை செய்தது நாமக்கல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.