அமெரிக்க ஜோ பைடனுக்கு கொரோனா - தேர்தலில் இருந்து விலகுகிறாரா?
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா (covid 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜோ பைடன்
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே கடந்த 2022 ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பின் தீவிர சிகிச்சையால் அதில் இருந்து மீண்டு வந்தார். தற்போது 2ம் முறையாக லாஸ் வேகாசில் பரப்புரையில் இருந்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் டெல்வாரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அலுவலகப் பணிகளை மேற்கொள்வார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நலமுடன் உள்ளேன் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல்
இந்நிலையில் வரும் நவம்பர் 5 ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே நடந்த விவாதத்தின் போது ஜோ பைடன் பேச முடியாமல் திணறியதாகவும் பல இடங்களில் பேச்சை நிறுத்தி அப்படியே நின்றதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சொந்த கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சிக்கு நிதி வழங்கும் தொழிலதிபர்கள் ஜோ பைடனை போட்டியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படியான நிலையில் மருத்துவர்கள் என்னை சோதனை செய்து விட்டு, உடல் நலனில் பிரச்சனை இருக்கிறது என்று கூறினால் போட்டியில் தொடரும் முடிவை மறு பரிசீலனை செய்வேன் என கூறியிருந்தார். தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஜோ பிடென் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.