இனி ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது - அரசின் புதிய உத்தரவு
ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என அரசு புதிய உத்தரவ பிறப்பித்துள்ளது.
விபத்தால் உயிரிழப்பு
இந்தியாவில் போக்குவரத்து சட்டப்படி இரு சக்கர மோட்டார் வாகனங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயம். விதியை மீறி ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் சாலை விபத்துகளால்ஆண்டுதோறும் சுமார் 25,000 பேர் உயிரிழப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஹெல்மெட் கட்டாயம்
இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஹெல்மெட் அணியும் விதியை கடுமையாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டமானது ஜனவரி 26 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அது அவ்வப்போது மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த புதிய உத்தரவானது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியை பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் நிலையங்களில், ‘தலைக்கவசம் இல்லையென்றால், எரிபொருள் இல்லை’ என்ற வாசகங்கள் கொண்ட முக்கிய பலகைகள் பொருத்தப்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.