வேலையில்லாததால் வங்கி கணக்கை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் இளைஞர்கள் - பின்னணியில் பெரும் ஆபத்து
வேலையில்லா இளைஞர்கள் வங்கி கணக்கை இணைய மோசடி கும்பலுக்கு வாடகைக்கு விடும் சம்பவம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவா
கோவாவில் வேலை இல்லாத இளைஞர்களை குறிவைத்து நூதன மோசடி அரங்கேறி வருகிறது. வேலை இல்லாத இளைஞர்கள் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து வரும் நிலையில், கமிஷனுக்காக வங்கி கணக்குகளை இணைய மோசடி கும்பலிடம் வாடகை விடுவது தெரிய வந்துள்ளது.
இதன் படி, 1லட்சம் மதிப்புள்ள ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனைக்கும் 1000 ரூபாயை கமிஷனாக மோசடி கும்பல் வழங்குகிறதாம் . மேலும் காசோலை புத்தகம் உள்பட வங்கிக் கணக்கின் அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கிறார்களா என்பதை அந்த மோசடி கும்பல் உறுதி செய்துக் கொள்கிறது.
இந்த வங்கிக்கணக்கில் யார் பணம் அனுப்புவது, எதற்காக அனுப்புகிறார்கள் என்ற எந்த விவரமும் அந்த இளைஞர்களுக்கு தெரியாது. வரும் பணத்தில் தனக்கு தேவையான கமிஷனை எடுத்து கொண்டு மீதி பணத்தை மோசடி கும்பலிடம் கொடுத்து விடுகிறார்கள்.
இணைய மோசடி
சியோலிம் பகுதியை சேர்ந்த ஒருவர் ரூ 45 லட்சத்தை இணைய வர்த்தகத்தில் இழந்ததாக கொடுத்த புகாரை விசாரித்த போது 20 முதல் 25 வயதுக்குட்பட்ட பல இளைஞர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அந்த தொகை மாற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், இதே போல் பெண் மருத்துவர் ஒருவரிடம் ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்தால் அதிக வருமானத்தை தருவதாக கூறி ரூ 90 லட்சம் மோசடி செய்யப்பட்டது. அதே போல் நகை வியாபாரி ஒருவரிடம் ரூ 2.5 கோடி மோசடி செய்யப்பட்டது. இந்த பணம் எல்லாம் இது போன்ற இளைஞர்களின் வங்கி கணக்கில் போடப்பட்டு, அவர்களுக்கான கமிஷனை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை மோசடியாளர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த சம்பவங்களில் வேலை இல்லாத இளைஞர்கள் கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு, இது போன்ற இணைய மோசடி குற்றங்களில் பலிகடா ஆகிறார்கள். வங்கி கணக்கு உள்ளிட்ட முக்கிய விவரங்களை அவசியம் இன்றி யாருக்கும் தர வேண்டாம் என்றும், மேலும் இது போன்ற மோசடியாளர்கள் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.