டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் - நேரில் சந்திக்கும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகி வீட்டில் சந்தித்தபோது அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி
மேற்கு டெல்லியில் கணவனைப் பிரிந்த 35 வயதான பெண் ஒருவர், தன் இரண்டு குழந்தையுடன் வசித்து வருகிறார். அவர் பிரபல டேட்டிங் ஆப் மூலம் ஜதின் என்பவருடன் இரண்டு நாட்கள் உரையாடியுள்ளார். அதன்பின் நேரில் சந்திக்க முடிவு செய்து ஜதினை தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். ஜதின் தன் நண்பர் ஒருவருடன் மதியம் 12 மணிக்கு வந்திருக்கிறார்.
அந்தப் பெண்ணும் ஜதினும் தனி அறையில் பேசிக்கொண்டிருந்த போது, உடன் வந்த நண்பர், அந்தப் பெண்ணின் மகனை வீட்டை சுற்றிக் காண்பிக்கக் கூறியிருக்கிறார். இதை, அந்த சிறுவன் தன் அம்மாவிடம் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்த சந்திப்பு முடிந்திருக்கிறது.
கொள்ளை
பின்னர், ஜதின் அந்தப் பெண்ணை தொடர்புகொண்டு மீண்டும் சந்திக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். மீண்டும் இரவு 10 மணிக்கு நண்பருடன் வந்த ஜதின் அந்தப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, கழுத்தை நெரித்து, டேப் மூலம் கை, கால்களைக் கட்டி வாயை டேப்பால் மூடியிருக்கிறார்.
மேலும், வீட்டில் இருந்த தங்கச் சங்கிலி, செல்போன், 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். இது தொடர்பாக கடந்த மே 31-ம் தேதி பாதிக்கப்பட்டப் பெண் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
வழக்கு பதிவு செய்த காவல்துறை, அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் போலி நம்பர் பிளேட் கொண்ட காரில் இருவரும் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு வெளியே இருந்த விஜய் (28), ராகுல் (35) ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்தது.
கைது
இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, ``இருவரிடமும் விசாரித்ததில், இதே போல் பல்வேறு குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இருவரும் அந்த டேட்டிங் ஆப்பில் போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் தனிமையில் இருக்கும் பெண்களை குறி வைத்து பேசி, இரண்டு நாட்களில் அவர்கள் நம்பிக்கையை பெற்று வீட்டிற்க்கு சென்று நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் செல்போன் மூலம் புதிய கணக்கை தொடங்கி அடுத்த பெண்ணிடம் பேச தொடங்கியுள்ளனர். இந்த செயலியில் கணக்கு தொடங்கும் பொது கணக்கை சரிபார்க்க 4 நாட்கள் கால அவகாசம் எடுக்கும் அதற்குள் பழகி கொள்ளையடித்துவிட்டு அந்த கணக்கை அழித்து விடுவார்கள்.
காவல்துறை
ஏற்கனவே இவர் 2016-ம் ஆண்டு ஆனந்த் விஹாரில் ஒரு கொள்ளைச் சம்பவத்திற்காகவும், பின்னர் 2018 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் இதே போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இவர்கள் கொள்ளையடித்ததாகக் குறிப்பிடும் பலப் பகுதிகளிலிருந்து எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. அந்த தைரியம்தான் இவர்களை தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட வைத்திருக்கிறது.
இது போன்ற பாதுகாப்பற்ற செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும் இது போன்ற குற்றங்கள் நடந்தால் உடனே காவல்துறையிடம் புகார் தெரிவிக்கவும். அந்தப் புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.