வாகன ஓட்டிகளே உஷார்; ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு - இன்று முதல் அமல்!
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்தது.
வாகனங்களில் ஸ்டிக்கர்
சென்னை சென்னை போலீசார் சார்பில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பிரஸ், போலீஸ், டாக்டர், மற்றும் வக்கீல் என ஸ்டிக்கர் ஒட்டுவதை அகற்றுமாறு அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஊடகம், வக்கீல் மற்றும் டாக்டராக பணியில் உள்ளவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவரும் அவசர காலத்திற்காக செல்கிறோம். வழியில் போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினால் பணிகள் பாதிக்கப்படும்.
இன்று முதல் அமல்
மேலும் இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வக்கீல்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், முதல் தடவை அவ்வாறு செய்தால் 500 ரூபாய் அபராதம் என்றும் இரண்டாவது தடவை அதேபோன்று செய்தால் 1500 ரூபாய் அபராதம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பலரும் வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை அகற்றினர். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் அவர்களின் பெயரில் வாகனங்கள் இருந்தால் மீடியா அல்லது பிரஸ் என்று ஒட்டிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.