பெண்களுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடம் - ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
10 நிமிடத்திற்கு ஒரு பெண் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.
வன்முறைகள் ஒழிப்பு தினம்
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் நேற்று முன்தினம் (25.11.2024) கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி ஐ.நாவின் கிளை அமைப்புகளான ஐ.நா பெண்கள் மற்றும் ஐ.நா.வின் போதைப்பொருள், குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு சார்பில் பெண்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
85,000 பெண்கள் கொலை
அந்த அறிக்கையில், "கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் 85,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். அதில் 51,100 பேர் அவர்களின் வாழ்க்கை துணை அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடே மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது.
கொலைக்கு பலியாவதில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், கடந்தாண்டு கொல்லப்பட்டவர்களில் 60% பேர் உறவினர்களாலேயே இறந்துள்ளனர். இது அவர்களின் உறவினர்களால், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருவர் கொல்லப்படுவதற்கு சமம்.
ஆப்பிரிக்கா முன்னிலை
இதில் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. ஆப்பிரிக்காவில் 2023 ஆம் ஆண்டில் 21,700 பேர் வாழ்க்கை துணை அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஆசியாவில் 18,500 பேரும், அமெரிக்காவில் 8,300 பேரும், ஐரோப்பாவில் 2,300 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதாவது ஆப்பிரிக்காவில் உள்ள பெண்களில் 100,000 பேருக்கு 2.9 பேரும், அமெரிக்காவில் 100,000 பெண்களுக்கு 1.6 பேரும், ஆசியாவில் 100,000 பெண்களுக்கு 0.8 பேரும் மற்றும் ஐரோப்பாவில் 100,000 பெண்களுக்கு 0.6 பேரும் என்ற அளவில் உள்ளது.