உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - இலங்கை செல்கிறார் ஐ.நா.உணவு திட்ட அதிகாரி
இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து நிலைமையை ஆய்வு செய்ய ஐ.நா.உணவு திட்ட அதிகாரி கொழும்பு செல்கிறார்.
உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உரங்கள் இறக்குமதிக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்ச தடை விதித்தார். இதனால் அங்கு உணவு தானிய உற்பத்தி குறைந்தது.
டாலர் தட்டுப்பாட்டால் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கையில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஐ.நா உலக உணவு செயல் திட்டத்தின் செயல் இயக்குநர் டேவிட் பீஸ்லேவுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே காணொளி வாயிலாக பேசினார்.
அப்போது இலங்கை நிலைமையை நேரில் கண்டறிய வருமாறு ரணில் அழைப்பு விடுத்தார் இதையேற்றுக் கொண்ட டேவிட் இலங்கை வர முன்வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உயிர்காக்கும் உதவிகள் வழங்க சுமார் 350 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக கூறியுள்ள ஐ.நா. இதற்கு உலக நாடுகள் நன்கொடை வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் கடைசி கப்பல்கள்
இந்த நிலையில் இலங்கையில் பெட்ரோல்,டீசலுக்கு தட்டுப்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா கடனுதவி திட்டத்தின் கீழ் ஒரு டீசல் கப்பல் வரும் 16-ம் தேதியும்,மற்றொரு பெட்ரோல் கப்பல் வரும் 22-ம் தேதி இலங்கைக்கு அனுப்பப்படுகிறது.
கடனுதவி திட்டத்தின் கீழ் இந்தியா அனுப்பும் கடைசி கப்பல்கள் இவை என்பதால் இலங்கை மக்கள் அதை எதிர்பார்த்து காத்திருப்பதாக எரிசக்திதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை்கு நாள் ஒன்று 5 ஆயிரம் டன் டீசல் தேவை என்ற நிலையில்,எரிபொருள் தட்டுப்பாடு வரும் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து பன்மடங்கு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
Spoke to @WFPChief of the @WFP today and invited him to visit Sri Lanka. He accepted my invitation and is planning to visit shortly. We appreciate all the support extended to us by the @WFP.
— Ranil Wickremesinghe (@RW_UNP) June 10, 2022