காலை உணவுத்திட்ட சமயலறை; மனிதக் கழிவை பூசிய மர்ம நபர்கள் - கொடூரம்!
காலை உணவுத்திட்ட சமையல் கூடத்தில் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பள்ளி சமயலறை
சேலம், காவிரிபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 170 மாணவ - மாணவிகள் படித்துவருகின்றனர். 7 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில், விடுமுறை தினம் முடிந்த நிலையில், பள்ளியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, சமையலறைக்கூடத்துக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு மனிதக்கழிவுகளைப் பூசி சிலர் அட்டூழியம் செய்திருந்தனர்.
மர்ம நபர்கள் அட்டூழியம்
இதுகுறித்து, அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சுவர்ணலதாவுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே, தனியார் கட்டடத்தில் உணவு தயார் செய்து மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதுகுறித்த தகவலறிந்த மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம், கொளத்தூர் வட்டாட்சியர் முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின் தூய்மைப் பணியாளர்கள் மூலம் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் தூய்மைப்படுத்தப்பட்டு, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, பெற்றோர்கள் இரவு நேரக் காவலாளிகளை நியமித்து, பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.