மக்கள் செத்தால் சாகட்டும், சிக்கிய டைரி; ரிஷி சுனக் அலட்சியம் - தொடரும் சர்ச்சை
மக்கள் இறந்தால் இறக்கட்டும் என ரிஷி சுனக் கூறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரிஷி சுனக்
uk-pm-sunakபிரிட்டன் பிரதமர் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக். முன்னதாக கொரோனாவில் மக்கள் பலியானதன் காரணம் குறித்தும், அதைத் தடுக்க அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது என்பதைப் பற்றியும் ஆராய, குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அதன் விசாரணை 2026 வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரிட்டன் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்த பேட்ரிக் வாலன்ஸின் டைரி ஒன்று விசாரணைக்குழுவிடம் கிடைத்தது.
சிக்கிய டைரி
அதில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போது, `ஊரடங்குக்கு உத்தரவிட வேண்டாம். அது நாட்டின் பொருளாதார நிலையை மேலும் வலுவிழக்கச் செய்யும். எனவே, மக்கள் இறந்தால் இறக்கட்டும். அரசு அதை அனுமதிக்க வேண்டும்' என ரிஷி சுனக் தெரிவித்ததாக எழுதியிருக்கிறார்.
மேலும், போரிஸ் ஜான்சனின் மூத்த ஆலோசகராக இருந்த டொமினிக் கம்மிங்ஸ், `ரிஷி, மக்கள் இறக்கட்டும் பரவாயில்லை என்று நினைக்கிறார். முழுக்க முழுக்க தலைமைத்துவப் பண்பே இல்லாததுபோல் உணர்கிறேன்' எனத் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாலர், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பதிலளிப்பதைவிட, பிரதமர் ரிஷி சுனக் விசாரணையில் ஆதாரங்களை வழங்கும்போது, தனது நிலைப்பாட்டைப் அறிவிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.