மாநில மொழிகள் உயிரோடு இருக்க காரணமே திராவிட இயக்கம்தான் - உதயநிதி ஸ்டாலின்
இந்தி மொழியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்
உதயநிதி ஸ்டாலின்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா நடத்திய கலை, இலக்கிய திருவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பேசிய அவர், தமிழகத்தில் இருந்து வெளியே இருந்தாலும் சொந்த மண்ணில் இருப்பது போன்ற உணர்வுதான் இருக்கிறது என கூறினார்.
கேரளா
மேலும், மொழி, இலக்கியம் மற்றும் அரசியலின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இணக்கமான வரலாறு உண்டு. 1924 ஆம் ஆண்டு கேரளத்தில் நடந்த வைக்கம் போராட்டத்தை முன்நின்று நடத்தி வெற்றி பெற்றார் தந்தை பெரியார்.
அதே போல, கேரளாவில் பிறந்த டி.எம்.நாயர், தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தொடக்கப்புள்ளியாக இருந்த தென் இந்திய நல உரிமை சங்கத்தை தொடங்கினார். அது தமிழ்நாட்டில் புது அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது.
திராவிட இயக்கம்
சமத்துவத்திற்கு எதிராகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்கு எதிராகவும் சமஸ்கிருதம் இருந்தது. சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதனை மாற்றியது நீதிக்கட்சிதான்.
மாநில மொழிகளின் உரிமையை காப்பதில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் முக்கிய பங்கு வகித்தது.இந்தி திணிப்புக்கு எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின.
முற்போக்கு கருத்துகளை வளர்த்தெடுப்பதில் தமிழ்த் திரைப்படங்கள் முக்கிய பங்காற்றின. திரைப்படங்கள் மூலமாகவும் சமூக சீர்த்திருத்தங்களை திமுக மேற்கொண்டது. இந்தி மொழியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம். இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருப்பதற்கு திராவிட இயக்கம்தான் காரணம்" என பேசினார்