துணை முதல்வரானதும் உதயநிதியின் முதல் கையெழுத்து எது தெரியுமா?
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினின் முதல் கையெழுத்து தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது. இந்த போட்டிகள் அக்டோபர் மாதம் 24ம் தேதி வரை மொத்தம் 20 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதனை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். அதன்பின் பேசிய அவர், துணை முதல்வர் ஆன பிறகு அந்த பொறுப்பை ஏற்ற பிறகு நான் கையெழுத்திட்ட முதல் கோப்பு இந்த முதலமைச்சர் விளையாட்டு போட்டிக்கானது தான்.
முதல் கையெழுத்து
இதற்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவது தொடர்பான கோப்பில் தான் முதல் கையெழுத்திட்டேன் என்பதை நான் இங்கே பெருமையுடன் கூறி கொள்ள விரும்புகிறேன். இந்த சிறப்புக்குரிய நிகழ்வுக்கு 2 முக்கியமான வீரர்கள் வந்துள்ளனர். மாற்றுத்திறன் பேட்மிண்டன் வீராங்கனை தங்கை துளசிமதி முருகேசன் இங்கே வந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித்தந்தவர் தான் இவர். விளையாட்டில் சாதிப்பதற்கு தடை எதுவும் இல்லை என்பதற்கு சான்றாக செயல்பட்டு வரும் துளசிமதிக்கு பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றதற்காக முதலமைச்சர் ரூ.2 கோடியை உயரிய ஊக்கத்தொகையை வழங்கினார்.
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் ஹேண்ட் பால், கேரம், செஸ், பென்சிங், ஜூடோ, பாக்சிங், கோ- கோ, டிராக் சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ் போன்ற புதிய விளையாட்டுகளையும் சேர்த்து இருக்கிறோம்.
இந்த திட்டத்தின் கீழ் நானே நேரில் சென்று 23 மாவட்டங்களுக்கு விளையாட்டு உபகரணங்களுக்கான கிட் வழங்கி உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.