ஓபிஎஸ் திமுகவின் பி டீமா?.. வம்பிழுத்த நிருபர் உதயநிதி சொன்ன பதில் என்ன?
திமுகவில் ஏ டீம், பி டீம் என்பது கிடையாது. தளபதி தலைமையில் ஒரே டீம் தான் என்று உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ராஜ ராஜகோபாலத் தொண்டைமானின் உருவ சிலைக்கு திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அறையில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
ஓபிஎஸ் பீ டீமா
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு புதுக்கோட்டையில் மணிமண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திராவிட மாடல் தேசிய மாடலாக மாற்றப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டதோடு உங்கள் பதில்தான் என் பதில் என்று கூறினார்.
எப்பவுமே ஒரே டீம் தான்
இதன்பிறகு ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்று அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனரே என்று நிருபர்கள் கேட்டதற்கு திமுகவில் ஏ டீம், பி டீம் என்பது கிடையாது. தளபதி தலைமையில் ஒரே டீம் தான் என்று கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் திமுகவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள ஓபிஎஸ் புகழ்ந்து பேசியிருந்தார். அது போல் கருணாநிதி வசனம் எழுதிய பராசக்தி படத்தின் வசனத்தை மனப்பாடம் செய்ய தலைமாட்டில் எழுதி வைத்திருந்தேன் என கூறியிருந்தார். அது போல் அண்மையில் முதல்வர் ஸ்டாலினை தேனி எம்பி ரவீந்திரநாத் நேரில் சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் திமுகவுக்கு ஓபிஎஸ்ஸும் அவரது மகனும் ஆதரவு தெரிவிப்பதாகவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குற்றம்சாட்டுகிறார்கள்.
நகமும் சதையும் போல் ஒபிஎஸ் ஈபிஎஸ் உள்ளனர் : அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்