முக்கிய புள்ளிகளுக்கு தடபுடலாக விருந்தளித்த உதயநிதி - என்ன நடக்க போகிறது திமுகவில்?
திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருந்தளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதை மற்ற தமிழக அமைச்சர்களும் வரவேற்று பேட்டியளித்து வருகின்றனர்.
சமீபத்தில் திமுகவின் இளைஞரணி 45ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி குறித்து பேசினார். மேலும், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை போல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியை பெற உழைக்க வேண்டும் என பேசினார்.
மு.க.ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் இப்பொழுதே தேர்தல் பணிகளில் திமுக தலைமை கவனம் செலுத்த துவங்கி விட்டது. அதிலும் நாடாளுமன்ற தேர்தலை போல பெரும் வெற்றியை பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.
இதற்காக கட்சியில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என ஆலோசித்து பரிந்துரை செய்ய திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
விருந்து
இந்நிலையில் நேற்று இரவு சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது குறிஞ்சி இல்லத்தில் கட்சியினருக்கு ஸ்பெஷல் விருந்து அளித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதில், ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, எ.வ. வேலு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அன்பகம் கலை, ஆஸ்டின், தாயகம் கவி, மணிமாறன், ஹெலன் டேவிட்சன், ராணி, முத்துசெல்வி உட்பட 234 சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் பேசிய அமைச்சர் உதயநிதி, தொகுதி பொறுப்பாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டியதோடு, கிராமம் கிராமமாக சென்று திமுக ஆட்சியின் திட்டங்களை மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும், 2026 சட்டசபை தேர்தல் வெற்றிக்கும் பணியாற்ற வேண்டும் என்றும் உதயநிதி கேட்டுக் கொண்டுள்ளார். இதன் பின் குழுவாக புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த கூட்டம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்திலும் அமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ள, 2026 சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்பட்டு வரும் தொகுதி பார்வையாளர்களை குறிஞ்சி இல்லத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினோம்.
— Udhay (@Udhaystalin) July 23, 2024
நாடாளுமன்றத் தேர்தலில் 40- க்கு 40… pic.twitter.com/yL1Bxlde54
இந்த விருந்தில் சீரக சம்பா மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, வஞ்சிரம் மீன் வறுவல், மிளகு கொத்துக் கோழி, மட்டன் கோலா உருண்டை, சிக்கன் தொக்கு, பரோட்டா, முட்டை தோசை, நாட்டுக்கோழி குருமா, தயிர் பச்சடி, மாம்பழம் ஸ்வீட் ரோல், முந்திரி பிரட் அல்வா போன்றவை இடம்பெற்றிருந்தன. இந்த உணவு வகைகளை, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குழுவினர் தயாரித்திருக்கிறார்கள்.