துணை முதல்வர் பதவி - வெளிப்படையாக பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்
ஸ்டாலின் துணை முதல்வர் பதவி குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு முன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
குறிப்பாக இளைஞரணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக கட்சியினரே பேசி வந்தனர். அமைச்சர் மனோ தங்கராஜிடம் இது பற்றி கேட்டபோது உதயநிதிக்கு துணை முதல்வர் ஆவதற்கான அணைத்து தகுதியும் உள்ளது. மக்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள் என பேசினார்.
உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் இன்று திமுகவின் இளைஞரணி 45ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் வைத்து உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக தலைமையை வலியுறுத்தி, தூத்துக்குடி இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மதியழகன் வேண்டுகோள் வைத்தார்.
இதன் பின் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், சேலம் மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூற வேண்டும். திமுகவில் இளைஞர் அணி எப்போதும் முதன்மையாக இருக்கிறது. மோடி 6 முறை தமிழகம் வந்தும் குறைந்தபட்சம் 3 தொகுதியாவது கிடைக்குமா என எதிர்பார்த்தார்கள். ஆனால் பாஜகவின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
சமூக வலைதளம்
40 க்கு 40 வெற்றியை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மக்களவை தேர்தல், விக்கிரவாண்டி தேர்தல் வெற்றிக்கு இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கு முக்கியமானதாக இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் பல நிகழ்வில் இருந்தாலும் இளைஞரணி நிகழ்வு என்றவுடன் அதற்கென வாழ்த்துக்களை தெரிவித்தார். தலைவர் இன்று இத்தனை பெரிய பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்றால் அதற்கு அடித்தளமிட்டது இளைஞரணி தான்.
மக்களை நேரில் சந்திக்கும் அரசியல் களம் எப்படி முக்கியமோ அதே போல் சமூக வலைத்தளமும் முக்கியம். பாஜக சமூக வலைத்தளம் மூலம் பல பொய்களை பரப்பி வருகிறது. எனவே சமூக வலைத்தளங்களில் அனைவரும் ஆக்டிவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என பேசினார்.
வதந்தி
இதன் பின் துணை முதல்வர் தொடர்பாக தீர்மானம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருக்கு துணையாக வரவேண்டும் என தீர்மானம் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பத்திரிகையில் வருகின்ற கிசுகிசுக்கள், வதந்திகளை படித்துவிட்டு வந்து, ஒருவேளை இது நடக்கப்போகிறதோ என்ற அடிப்படையில் நாமும் ஒரு துண்டை போட்டுவைத்துக்கொள்வோம் என்ற ரீதியில் இங்கு பேசியிருக்கிறீர்கள்.
தலைவர் ஸ்டாலின் எந்த பொறுப்புக்கு போனாலும் தனது மனதுக்கு மிக மிக நெருக்கமானது இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் என பலமுறை கூறியிருக்கிறார். அதே போல், துணை முதலமைச்சர் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோதெல்லாம், அமைச்சர்களாகிய நாங்கள் அனைவரும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம். இங்கு வந்திருக்கக் கூடிய அனைத்து அமைப்பாளர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்பார்கள்.
எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் எனக்கு மனதிற்கு மிக மிக நெருக்கமான ஒரு பொறுப்பு என்றால் அது திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளர் பொறுப்பு தான்.எனவே எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞர் அணியை மறந்து விட மாட்டேன் " என இது குறித்த பேச்சுகளுக்கு பதிலளித்தார்.
2026 தேர்தல்
மேலும், "நாடாளுமன்ற தேர்தலில் எப்படி வெற்றிக்காக உழைத்தோமோ அதே போல் அடுத்து வரும் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக உழைக்க வேண்டும். 2026 தேர்தலில் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும். முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார். என பேசியுள்ளார்.
கூட்டம் முடிந்த பின்னர், 'எந்த பொறுப்புக்கு சென்றாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் என பேசினீர்கள், உங்களுக்கான பொறுப்புகள் மாறுகிறதா' என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "பொறுப்புகள் மாற்றம் குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்" என பதில் அளித்தார்.