முதல்வன் பட பாணியில் நடவடிக்கை எடுக்கும் உதயநிதி - நடுங்கும் அதிகாரிகள்
சரியாக செயல்படாத அதிகாரிகள் மீது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மதுரையில், பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்குதல், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குதல் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
4 பேர் பணியிட மாற்றம்
இதன் பின் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புகார்கள் வந்ததையடுத்து, அங்கு சென்று ஆய்வு நடத்திய உதயநிதி ஸ்டாலின், அங்கு உள்ள பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
ஆய்வு முடிந்த பின் அதிகாரிகளிடம் ஏற்பட்ட தொய்வு காரணமாக, வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர், ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு சமையலர் ஆகிய 4 பேர் உடனடியாக பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்திலும் ஆய்வு கூட்டம் நடத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் புதர்கள் மண்டி கிடப்பதாகவும், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அச்சத்தால் வாழ்வதாகவும் எனவே புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிய மனு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
செல்போனில் கேள்வி
அதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸ் அப்பகுதியை சுத்தம் செய்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக மனுவில் உள்ள புகார்தாரரின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என, கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் என தெரியாமல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மனுதாரர் அதிருப்தி தெரிவித்தார். இதனை அடுத்து தவறான விளக்கங்களை அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வன் படம் போல் மனுதாரரை தொலைபேசியில் அழைத்து விளக்கம் கேட்டு, தவறான பதில் அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம், மற்ற அதிகாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.