தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு என்னாச்சு? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!
ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு உதவிக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார், திரும்பிய அவர் தமிழர்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
ரயில் விபத்து
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்த 1175 பயணிகளில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணம் செய்ததால், அவர்களுக்கு உதவுவதற்காக தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஒடிசா சென்றனர். அந்த குழுவினர் இன்று சென்னை திரும்பினர்.
பேட்டி
இந்நிலையில், அவர் தமிழகம் திரும்பியதும் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், "ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை.
8 பேர் குறித்த தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 3 பேர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மற்ற 5 பேரும் நலமுடன் உள்ளதாக, அவர்களுடன் உடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
மேலும், "விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டன.
இனி மின் வழித்தட இணைப்புகள் கொடுக்கப்பட்டு, அந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவையை மீண்டும் வழங்குவதற்காக பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே ரயில் விபத்து தொடர்பாக தென்கிழக்கு வட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த உள்ளார். காரக்பூரில் நாளையும், நாளை மறுநாளும் விசாரணையை தொடங்க உள்ளார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.