மழை வெள்ள பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு..!! அமைச்சர் உதயநிதி தகவல்
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள காரணத்தால், மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
மழை பாதிப்பு
இது வரை இல்லாத மழை பொழிவாக கடந்த 2 நாட்களில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில், மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
உடனடியாக மீட்புப்பணிகளை முடிகிவிட்டுள்ள அரசு மக்களை மீட்பதிலும், அவர்களுக்கான உதவிகளை செய்வதிலும் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகின்றது. இன்று மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி சென்றார்.
உதயநிதி செய்தியாளர்கள் சந்திப்பு
அங்கு ஆய்வினை முடித்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் அளித்த அவர், மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மழை, வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்புகள் குறித்த கணக்கீடு செய்யும் பணி நடைபெறும் என்று குறிப்பிட்ட அமைச்சர், ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தகவல் அளித்தார்.
மேலும், தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தயார் நிலையில் உள்ளன என்று கூறினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.