தமிழக மக்கள் சாமி கும்பிடுவார்கள்; உதய சூரியனுக்கு தான் ஓட்டு - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
தமிழக மக்கள் சாமி கும்பிடுவார்கள், ஆனால் தேர்தலில் உதய சூரியனுக்குதான் ஓட்டு போடுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
நடப்பாண்டில் மக்களவை தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் களம் சற்று சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில்,சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து எடப்பாடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர், சேலம் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றால்தான் 100 சதவீத வெற்றி ஆகும். சேலம் பழைய பேருந்து நிலையம் ரூ.98 கோடி மதிப்பில் புனரமைப்பு செய்யப்படும்.
ரூ.548 கோடி மதிப்பில் சேலத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் கருப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்படும். சேலத்தில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும் சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும்.தவழ்ந்து சென்று முதல்-அமைச்சர் பதவிக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.
உதய சூரியனுக்கு ஓட்டு
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. தமிழ்நாடு அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு. சேலம் மாவட்டத்தில் மட்டும் 6 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பலனடைந்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை அதானிக்கு தாரைவார்த்துவிட்டார் பிரதமர் மோடி. மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் பலனடைந்தவர் அதானி மட்டுமே.
சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சி செய்தவர் மோடி. அயோத்தியில் மசூதியை இடித்து விட்டு ராமர் கோவிலை கட்டி உள்ளனர். தமிழக மக்கள் சாமி கும்பிடுவார்கள், ஆனால் தேர்தலில் உதய சூரியனுக்குதான் ஓட்டு போடுவார்கள்.
கோவில், சர்ச், மசூதி என அனைத்தையும் சமமாக பார்ப்பதுதான் சமூக நீதி. இட ஒதுக்கீட்டிற்காக போராடிய 21 பேரை சுட்டுக்கொன்றது அ.தி.மு.க அரசு. தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.