ஹிந்தியை ஏற்ற மாநிலங்களின் நிலை என்ன ஆனது? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
தமிழை காக்க உயிரை கூட கொடுக்க தயாராக உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக ஆர்ப்பாட்டம்
மும்மொழிக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின்
இதில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், " இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் துணை முதலமைச்சராககலந்து கொள்ளவில்லை, திமுக தொண்டர்களின் ஒருவனாகத்தான் கலந்து கொள்கிறேன். அரசியல் எங்களுக்கு இரண்டாவதுதான். மொழி, இன உணர்வுதான் முதன்மையானது.
தமிழர்கள் எந்தக் காலத்திலும் அடக்குமுறைக்கு பயப்பட மாட்டார்கள். இதனை பாசிச பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பெயர் கூட உச்சரிக்கப்படவில்லை. தற்போது கல்வித்துறைக்கு வரவேண்டிய தொகையை கொடுக்காமல், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி கொடுப்போம் என தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே கூறுகிறார்.
இன்று தமிழர்கள் பல்வேறு துறைகளில் வேலை பார்த்து வருகின்றனர். இஸ்ரோவுடைய தலைவரே தமிழர் தான். அவர்களில் பெரும்பாலானோர் அரசு பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையை கற்றவர்கள்தான்.
அதிமுகவுக்கு அழைப்பு
நாங்கள் ஒன்னும் உங்களது அப்பன் வீட்டுக் காசை கேட்கவில்லை. பிச்சையோ, கடனோ நாங்கள் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த வரிப்பணத்தை தான் நிதியாக திருப்பி கேட்கிறோம். எங்களுக்கு சேர வேண்டிய நிதி உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம்.
ஒன்றிய அரசு விரைவில் நிதி வழங்கவில்லை என்றால் இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் போராட்டக் களமாக மாறும். இந்த ஆர்ப்பாட்டம் போராட்ட களமாக மாறாமல் இருப்பது ஒன்றிய அரசின் கையில்தான் உள்ளது.
இது திமுகவுக்கான பிரச்னை கிடையாது. மாணவர்களுக்கான போராட்டம். தமிழுக்கான போராட்டம். இதில் அவதூறு பரப்பாமல் அண்ணா பெயரை வைத்துக்கொண்டு அதிமுக ஒதுங்கி நிற்க கூடாது. எங்களோடு வீதிக்கு வாருங்கள்.
உயிரை கொடுப்போம்
தாய் மொழியை இழந்த மாநிலங்கள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது தமிழ்நாடு மட்டும் ஏற்கவில்லை என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறுகிறார். உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் ஹிந்தியை ஏற்றுக்கொண்டு, அந்த மாநிலங்களின் தாய்மொழியான போஜ்புரி, பீஹாரி ஆகியவற்றை இழந்துள்ளது.
தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுத்து விடுங்கள், இல்லை என்றால் எப்படி எடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என எச்சரிக்கை விடுக்கிறேன். தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரை சந்திக்கவும் தயங்காது. இந்த ஆர்ப்பாட்டம் வெறும் தொடக்கம் தான். விரைவில் தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டமாக மாறும். தமிழை காக்க உயிரை கூட கொடுக்க தயாராக உள்ளோம் " என பேசினார்.