விஜய் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளியில் ஹிந்தி உள்ளது - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
மும்மொழி கொள்கை தொடர்பாக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கை
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதால், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
அவரின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தி திணிக்கப்படாது
இந்நிலையில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் அண்ணாமலை மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதில் பேசிய அவர், "புதிய கல்விக் கொள்கையில் ஒருபோதும் இந்தியை திணிக்கவில்லை. மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படாது.
தமிழ்நாட்டில் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கட்டாய மொழியாக தமிழ் இல்லை. தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம். சிபிஎஸ்சி மாணவர்கள் இந்தி படிக்கின்றனர். மெட்ரிக் சிலபஸ்சில், மலையாளம், இந்தி, பிரஞ்சு, உருது, கன்னடம் உள்ளிட்ட மொழி வாய்ப்புகள் உள்ளது.
தமிழ் பயிற்று மொழி, ஆங்கிலம் கட்டாய பாட மொழி, விருப்ப மொழியாக இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் என சீமானே தனது தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். புதிய கல்விக் கொள்கையும் அதைத்தான் சொல்கிறது.
விஜய் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளி
விஜய் அவர்கள் 'விஜய் வித்யாஷ்ரம்' என்ற பெயரில் தனியார் சிபிஎஸ்சி பள்ளியை நடத்தி வருகிறார். அவரது இடத்தை 35 ஆண்டுகளுக்கு ஒரு அறக்கட்டளைக்கு லீஸ் கொடுத்து உள்ளார். அந்த அறக்கட்டளை எஸ்.ஏ.சந்திரசேகரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர் நடத்தக் கூடிய பள்ளிதான் விஜய் வித்யாஷ்ரம்.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சொந்த குழந்தை பிரஞ்சு படிக்கிறார். திமுக எம்பி கலாநிதி வீராசாமி நடத்தி வரும் சென்னை பப்ளிக் ஸ்கூல் என்ற மெட்ரிக் பள்ளியில் முதல் மொழியாக ஆங்கிலமும் , இரண்டாவது மொழியாக இந்தி, பிரஞ்சு, தமிழ் உள்ளிட்ட வேறு மொழிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக அன்பில் மகேஸ் கடிதம் எழுதுவாரா? அப்படி, எழுதினால் அன்று மாலையே மத்திய அமைச்சரை சந்தித்து பேச தயார். பாஜக சார்பில் மார்ச் 1ஆம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். 3 மாதங்களுக்கு வீடு வீடாக சென்று 3வது மொழி 3வது மொழி வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தி அந்த விவரங்களை குடியரசு தலைவருக்கு அனுப்புவோம்" என பேசினார்.