திமுகவினர் குழந்தைகள் 3 மொழி படிக்கலாம்; ஏழை குழந்தைகள் படிக்க கூடாதா? - அண்ணாமலை கேள்வி
தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்துவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மும்மொழி கொள்கை
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மருத்துள்ளதால் தமிழ்நாட்டுக்கு ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
அவரது பேச்சுக்கு தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் பலத்த கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மும்மொழி கொள்கை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
திமுகவினர் குழந்தைகள்
இதில் பேசிய அவர், "திமுக இன்னும் 1965 பஞ்சாங்கத்தையே கொண்டு வருகிறார்கள். ஹிந்தி மொழியை யார் திணித்தார்கள்? தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் 52 லட்சம் மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 56 லட்சம் மாணவர்களும் பயில்கின்றனர். சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி, ஐபி பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 30 லட்சம் பேர் 3 மொழிகளை படித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி திமுகவின் கடைசி கவுன்சிலர் வரை அவர்களது குழந்தைகள் மூன்று மொழிகள் கொண்ட பள்ளிகளில் படிக்கின்றனர். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மகன் கூட மூன்றாவது மொழியாக பிரஞ்சு படிக்கிறார். இவர்கள் வெளிநாட்டு செல்லலாம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதலாம்.
இந்தி கட்டாயமில்லை
ஆனால் ஏழை எளிய குடும்பங்களில் இருந்து அரசு பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் மூன்றாவது மொழியில் படிக்கக் கூடாதா? இவர்கள் அவங்களுக்கு போஸ்டர் ஓட்டணுமா? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தி கட்டாயமாக இருந்தது. புதிய கல்விக்கொள்கையில் 3வது மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என கட்டாயம் இல்லை. ஆனால் தமிழை வைத்து இங்கே திமுக பிழைப்பு நடத்தி வருகிறது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகள் கற்கலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா?
— K.Annamalai (@annamalai_k) February 17, 2025
அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்?
உங்களுக்கொரு நியாயம், எளிய… pic.twitter.com/QTOKBq2AqR
இத்தனை ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் கல்வியில் எந்த லட்சணத்தில் வைத்துளீர்கள் என்று பார்த்தீர்களா? 2024 ஆம் ஆண்டு acer அமைப்பு நடத்திய சர்வேயில் ஒரு தமிழ் பாராவை 2ஆம் வகுப்பு மாணவன் படிக்க முடியாமல் திணறுகிறான். 87% மாணவர்களால் அதனை படிக்க முடியவில்லை. இதுதான் நீங்கள் தமிழை வளர்க்கும் லட்சணமா?"என பேசியுள்ளார்.