பள்ளிகளில் விளையாட்டு பீரியடை கடன் வாங்க கூடாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
விளையாட்டு பீரியடை கடன் வாங்க வகுப்பு நடத்த வேண்டாம் என அமைச்சர் உதயநிதி ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
சான்றிதழ் வழங்கும் விழா
சர்வதேச தேசிய மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் 2023-2024 ம் கல்வியாண்டில் 10, 12 ம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின்
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் படிக்கும் மாணவனை பார்த்தால் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். மாணவிகள் பள்ளிக்கு நடந்து போவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் பெரியார். மாணவிகள் பள்ளிக்கு நடந்து போக கூடாது என்று பஸ் பாஸ் கொடுத்து பேருந்தில் போக வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அந்த மகிழ்ச்சி தான் உங்களை இங்கு பார்க்கும் போது எங்கள் அத்தனை பேருக்கும் ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சி எல்லா நாளும் தொடர வேண்டும் என்பது தான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் லட்சியம்.
அரசு பள்ளி தனியார் பள்ளி என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரித்து பார்த்ததில்லை. தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகள் அனைத்தும் அரசு பள்ளியில் சேர வேண்டும் என முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம்.
விளையாட்டு பீரியட்
மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும். அதற்கான அத்தனை உதவிகளையும் செய்து தர தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. விரைவில் கோவையிலும், திருச்சியிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைய உள்ளது. கட்டாய கல்வி சட்டப்படி வறுமையில் இருக்கும் குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த சட்டத்தினை செயல்படுத்துவதில் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளது.
கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு முக்கியம். எனவே Maths, Science டீச்சர்கள் விளையாட்டு பீரியடை கடன் வாங்கி வகுப்பு நடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.