இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் ஊக்கத்தொகை அதிகம் - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று செயல்படுவது திராவிட மாடல் அரசு என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதலமைச்சர் புத்தாய்வு திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிறைவு சான்றிதழ் வழங்கினார்.
இதன் பின் பேசிய அவர், "மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் தத்துவத்தை முன்னிறுத்தி செயல்படுகிற அரசு.
அரசுக்கும் மக்களுக்கும் பாலம்
மக்களுக்கான தேவைகளை அறிந்து அவற்றிற்கான தீர்வுகளை இன்னும் வேகமாக அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் புத்தாய்வு திட்டத்தை 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்கள். இந்த திட்டத்திற்கு 24000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2 கட்ட தேர்வு மூலமாக 30 பேர் தேர்வு செய்யப்பட்டு அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மூலம் தமிழ்நாடு அரசு அரசுத்துறை செயல்பாடுகள் மூலம் உங்களுக்கு பயிற்சி வழங்கியது.
அதன் அடிப்படியில் தமிழ்நாட்டில் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் ஒருங்கிணைப்பின் கீழ் சிறப்பாக செயல்பட்டீர்கள். அரசால் உங்களுக்கும், உங்களால் அரசுக்கு பயன் என்ற வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து பல்வேறு தீர்வுகளை தந்தீர்கள்.
வீட்டுவசதி துறை, சமூக நலத்துறை, நீர்வளத்துறை, விளையாட்டு துறை, மருத்துவத்துறை ஆகிய பல்வேறு துறைகளில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டதை நான் அறிவேன். நேற்று நிறைவு விழா நடந்த முதலமைச்சர் உலக கோப்பைக்ககு 'களம் நமதே', 'இது நம்ம ஆட்டம்' என்ற வார்த்தைகளை பரிந்துரைத்து அதை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தீர்கள்.
அதிக உதவித்தொகை
தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் இணைந்துள்ள உங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மாதம் ரூ.65,000 அளவுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் உங்களின் இதர செலவுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்பட்டது. இந்தியாவிலே இந்த அளவுக்கு ஊதியம் போல் உதவி தொகை வழங்கி பயிற்சி வழங்கியது தமிழ்நாடு அரசுதான்.
இதில் பலருக்கும் இடையிலே ஒன்றிய மாநில அரசில் 2லட்சம் ஊதியத்துடன் பணி வாய்ப்பு கிடைத்தது. சிலர் அந்த பணி வாய்ப்புக்கு சென்றாலும் இந்த பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும் என்று இதை தொடர்ந்த உங்களுக்கு எனது பாராட்டுகள். இன்றைக்கு பாரதிதாசன் பல்கலைகழகம் மூலம் முதுகலை சான்றிதழ் முடித்து இந்த 2 ஆண்டுகளில் அரசின் மூலம் கிடைத்த அனுபவத்தோடு நீங்கள் மக்களை நோக்கி செல்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
உங்கள் திறமையும் அறிவும் மக்களுக்கு பயன்பட வேண்டும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அரசுடன் இணைந்து செயல்படலாம். முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கு அடுத்த கட்ட சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. அவர்களுக்கும் நீங்கள் வழிகாட்டலாம். முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்ற உங்கள் வாழ்வில் புத்தொழி பரவட்டும். உங்கள் எதிர்காலம் சிறக்கட்டும்" என பேசினார்.