இந்த போட்டிகள்தான் தமிழ்நாட்டின் ஒலிம்பிக் - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
உலகத்தையே ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு புகழ் பெற்றுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதலமைச்சர் கோப்பை
தமிழ்நாட்டின் உள்ளூர் வீரர்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஏற்கனவே மாவட்ட, மண்டல அளவில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.
சென்னை மாவட்ட அணி
பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 வகையான பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றது. தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ், சிலம்பம், குத்துச்சண்டை, ஹாக்கி, கபடி உள்ளிட்ட 25 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் சென்னை மாவட்ட அணி 105 தங்கம் என மொத்தம் 254 பதக்கங்களை பெற்று முதலிடம் பெற்றுள்ளது. 31 தங்க பதக்கம் உட்பட மொத்தம் 93 பதக்கத்துடன் செங்கல்பட்டு மாவட்ட அணி 2 ஆம் இடத்தை பெற்றது. 23 தங்கம் பதக்கம் உட்பட 102 பதக்கங்களை கைப்பற்றி கோவை மாவட்ட அணி 3-ம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த போட்டிகளின் நிறைவு விழா இன்று (24.10.2024) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
தமிழ்நாட்டின் ஒலிம்பிக்
இதன் பின் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டின் ஒலிம்பிக்’ என சொல்லும் அளவிற்கு ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளை பிரமாண்டமாக நடத்திக் காட்டியுள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டை Extra curricular ஆக்டிவிட்டியாக பார்க்கவில்லை, Main curricular ஆக்டிவிட்டியாகவே பார்க்கிறார்.
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு உருவாகி வருகிறது. நாட்டிலேயே ஒரு மாநில அரசால் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில், அதிக வீரர்கள் கலந்து கொள்வதும், பரிசுத் தொகை வழங்கும் நம்பர் 1 மாநிலம் நம்முடைய தமிழ்நாடுதான்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை உலகத்தரத்தில் நடத்த 83 கோடி ரூபாயும், பரிசு தொகைக்கு மட்டும் ரூ.37 கோடி ரூபாயும் ஒதுக்கினார் முதல்வர் ஸ்டாலின்" என பேசினார்.
முதல்வர் ஸ்டாலின்
இதன் பின் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள். விளையாட்டுகளை மேம்படுத்த திறமையான வீரர்களை ஊக்கப்படுத்துவது அவசியம், உங்க குழந்தைக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் ஊக்கப்படுத்துங்கள்.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை பல்வேறு மகத்தான சாதனைகளை புரிந்து வருகிறது. இந்தியாவை மட்டுமல்ல , உலகத்தையே ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு புகழ் பெற்றுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி துணை முதலமைச்சரானதில் விளையாட்டு வீரர்களுக்கும் பங்கு உள்ளது. விளையாட்டுத்துறையை சிறப்பாக கவனித்து, இந்தியாவையே உற்றுநோக்க வைத்துள்ளார். விளையாட்டுத்துறையும் வளர்ந்திருக்கிறது, அந்த துறை அமைச்சரும் துணை முதல்வராக வளர்ந்திருக்கிறார்" என பேசினார்.