அமெரிக்காவுக்கு கறுப்பின இயக்கம் போல் தமிழ்நாட்டிற்கு திராவிட இயக்கம் - உதயநிதி ஸ்டாலின்
கண்ணுக்கு தெரிகின்ற நிறவெறியை விட கண்ணுக்கே தெரியாத சாதி வெறி கொடூரமானது என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
நூல் வெளியீட்டு விழா
அமைச்சர் க.பொன்முடி எழுதிய 'திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்' நூல் வெளியீட்டு விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த நூலை வெளியிட, திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி அந்த நூலைப் பெற்றுக்கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின்
இதன் பின் இந்த விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அமெரிக்காவில் நிறவெறியை எதிர்த்து, கருப்பின இயக்கங்கள் போராடியது. அதேபோல் தமிழ்நாட்டில் சாதி வெறியை எதிர்த்து கருப்புச் சட்டை அணிந்து திராவிட இயக்கம் போராடியது.
இன்றும் போராடிக்கொண்டிருக்கிறது. தோல் மூலம் கண்ணுக்கு தெரிகின்ற நிறவெறியை விட, கண்ணுக்கே தெரியாத சாதியின் வெறி மிகமிக கொடூரமானது. அமெரிக்காவில் நடந்த கருப்பின போராட்டத்தை விட வீரியமான வரலாறு கொண்டது சாதியை எதிர்த்து போராடும் நமது திராவிட இயக்கத்தின் வரலாறு.
திராவிட இயக்கம்
உலகில் பல நாடுகளில் கருப்பை இழிவாக நினைத்தார்கள். ஆனால் அதே கருப்பு நிறத்தை புரட்சிக்கான அடையாளமாக மாற்றிக் காட்டினார் தந்தை பெரியார். திராவிட இயக்கத்தை பொறுத்தவரையில், மதத்தை விட மனிதர்களின் உரிமைதான் பெரியது என்று உறுதியாக நம்புகிறது.
சிலபேர் இன்றைக்கு திராவிட இயக்கத்தை எப்படியாவது ஒழித்துவிடலாம், திராவிட என்ற வார்த்தையை நீக்கி விடலாம் என்று முயற்சி செய்கிறார்கள். அதற்கு தமிழ்நாட்டு மண்ணில் ஒருபோதும் இடம் கிடையாது.
கருப்பு, சிவப்பு கொடி இருக்கும் வரையில், கலைஞரின் கடைசி உடன்பிறப்பு இந்த மண்ணில் இருக்கிற வரையில், தலைவரின் கரம்பற்றி நடக்கும் நாம் இருக்கும் வரையில் பாசிஸ்ட்டுகள், சங்கிகள் கனவு ஒருபோதும் பலிக்காது” என பேசினார்.