டாட்டூ பிரியர்களே கவனம்... பச்சை குத்திய இருவருக்கு HIV!
பச்சை குத்திக் கொண்ட இருவருக்கு எச்ஐவி நோய் உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாட்டூ
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தின் பாரகான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்த்(20). அவருக்கு திடீரென காய்ச்சல் அதிகமாகி உடல் பலவீனமடைந்தது. தொடர்ந்து உடல்நிலை மோசமாகியுள்ளது.
இந்த நிலையில் அனைத்து சிகிச்சைகளுக்கு பிறகும் அவருக்கு நிவாரணம் கிடைக்காததால் மருத்துவர்கள் அவரை எச்ஐவி டெஸ்ட் எடுக்க பரிந்துரைத்தனர். அதனையடுத்து அவருக்கு சோதனை செய்யப்பட்டு எச்ஐவி உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதனை அந்த இளைஞர் நம்பவில்லை.
எச்ஐவி உறுதி
மேலும் டாக்டரிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், யாருடனும் உடல் உறவில் ஈடுபடவில்லை, ரத்தம் ஏற்றவும் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார். அப்போது அவரது டாட்டூவை கவனித்த டாக்டர்கள் அதுகுறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியில் தனது கையில் பச்சை குத்திக் கொண்டதாகவும் அதன்பின் தான் உடல்நிலை மோசமாக தொடங்கியதாகவும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நாக்வான் பகுதியைச் சேர்ந்த ஷெஃபாலி என்ற இளம் பெண்ணுக்கும் இதேபோன்ற சம்பவம் நடந்தது.
ஒரே ஊசி
அவர் ஒரு வியாபாரி மூலம் பச்சை குத்திக்கொண்டுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, அவருடைய உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. நோயியல் பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டது. டாட்டூ போடும் போது பாதிக்கப்பட்ட ஊசிகளை பயன்படுத்துவதே பிரச்சனைக்கு மூல காரணம்.
பச்சை குத்தப்படும் ஊசி மிகவும் விலை உயர்ந்தது. பொதுவாக, பச்சை குத்திய பிறகு, ஊசியை அழிக்க வேண்டும். ஆனால் அதிக வருமானம் ஈட்டுவதற்காக, பச்சை குத்துபவர்கள் ஒரே ஊசியை பல நபர்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
மருத்துவர்கள் கருத்து
இருப்பினும், பச்சை குத்துபவர்களுக்கு இந்த ஆபத்து தெரியாது. பச்சை குத்துபவர் இயந்திரத்தில் புதிய ஊசியைப் போட்டாரா என்று கூட பார்ப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட ஒருவர் அந்த ஊசியில் பச்சை குத்திக் கொண்டால்,
அதே ஊசியைப் பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
சமீபத்தில் பச்சை குத்தியவர்கள் எச்ஐவி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், இதனால் அவர்கள் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கலாம், என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.