அடுத்தடுத்து 2 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை - நெல்லையை உலுக்கிய சம்பவங்கள்!
நெல்லையில் ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் தற்கொலைகள்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம்தேதி பள்ளி விடுதியில் உள்ள மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
இந்த சம்பவம் நடைபெற்ற அன்றே திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி, விடுதி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலை அரங்கேறி வருகிறது.
ரயிலில் பாய்ந்து தற்கொலை
இந்நிலையில் நெல்லையில் ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மேலப்பாளையம் அருகேயுள்ள முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற மாணவன் பாளையங்கோட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
பள்ளியில் பாட நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்தியுள்ளான். இதைப்பார்த்த ஆசிரியர்கள் மாணவனை கண்டித்துள்ளனர். மேலும் பெற்றோரை அழைத்து மாணவன் நடவடிக்கை தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து மாணவன் பயன்படுத்து வந்த மொபைல் போனை தாய் பறித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் மருதம்நகர் ரயில்வே கேட் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை
மேலும், நெல்லை, களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார், இவர் தனது மகளான பாப்பா(18) என்பவரை பொன்னாக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார்.அங்கு கல்வி கட்டணமாக 12 ஆயிரம் ரூபாயை முத்துக்குமார் சிரமப்பட்டு செலுத்தியுள்ளார்.
தனது உழைப்பில் கிடைத்த அனைத்து பணத்தையும் கல்லூரி கட்டணத்திற்காக செலுத்தியதால் குடும்ப செலவுக்கு பணம் இன்றி சிரமப்பட்டுள்ளனர். இதனையடுத்து நேற்று முத்துக்குமார் தனது மனைவியோடு மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் மாணவி பாப்பா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மாணவி பாப்பாவின் கைப்பையை சோதனையிட்ட போது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியது. அதில், அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் தொடர் தற்கொலைகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.