கோவை பெட்ரோல் குண்டு வீச்சு - எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது!
கோவை பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெட்ரோல் குண்டுவீச்சு
கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இது தொடர்பாகக் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். அசாதாரண சூழலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விளக்கினார்.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்த அவர், கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மூலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
இருவர் கைது
தொடர்ந்து பேசிய அவர், "சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து ஜேசுராஜ், இலியாஸ் ஆகிய இருவரை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கைது செய்துள்ளோம். இலியாஸ் குனியமத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தர்.
மற்றொருவர் அறிவொளி நகரைச் சேர்ந்தவர். அவர்கள் எஸ்டிபிஐ கட்சி பொறுப்பில் இருப்பவர்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம். குனியமத்தூர் ஆய்வாளர் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளார்.
தீவிர விசாரணை
கோவையில் மட்டும் இதுபோல மொத்தம் 6 சம்பவங்கள் உள்ளன. கடைசியாக நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தில் தான் இந்த இருவரைக் கைது செய்துள்ளோம். அதன் பின்னர் பெட்ரோல் கண்டு வீச்சு சம்பவங்கள் கோவையில் எதுவும் நடக்கவில்லை. போலீசார், அதிவிரைவு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களிலும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். குறிப்பாக 2 வழக்குகளில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்கப் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இதில் தொடர்புடைய அனைவரும் விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
பல அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்துப் பேசியுள்ளோம். அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளிக்கின்றனர். கோவையில் இப்போது அமைதியான சூழலே நிலவுகிறது. பதற்றம் எதுவும் இல்லை. மற்ற வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து,, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என்று அவர் தெரிவித்தார்.