பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் : டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர்.
அமலாக்துறை சோதனை
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நடந்த இந்த சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மத அமைப்பினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலவரமான கோவை
இதனிடையே, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு பின்னர் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாஜக அலுவலகம் மற்றும் இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகளின் நிர்வாகிகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது.
டிஜிபி எச்சரிக்கை
இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், கோவையில் 2 ஆர்.ஏ.எஃப் பிரிவுகள், மாநில கமாண்டோ படையின் 2 பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை 2 பிரிவுகள் என கூடுதலாக 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதே சமயம் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.