தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை; நேரம் இதுதான் - விஜய் தரப்பில் பதில்
தவெக மாநாடு தொடர்பாக காவல் துறையினர் கேட்ட 21 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
சமீபத்தில் கட்சி கொடியை வெளியிட்ட அவர், விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி தனது கொள்கைகளை அறிவிக்க உள்ளார்.
விக்கிரவாண்டி மாநாடு
இந்த மாநாட்டிற்கு அனுமதி கோரி கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் காவல் துறையிடம் மனு அளித்தார். இதனையடுத்து, காவல்துறை தரப்பில் 21 கேள்விகள் எழுப்பி பதில் அளிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளது.
தற்போது இந்த கேள்விகளுக்கான பதிலை கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் காவல் துறையிடம் அளித்துள்ளார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்." காவல் துறை தரப்பில் அனுமதி தொடர்பாக 2 நாளில் பதில் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின்னரே கட்சியின் தலைவர் விஜய், மாநாடு குறித்த அறிவிப்பினை வெளியிடுவார்” என்றார்.
21 கேள்விகளுக்கு பதில்
மாநாட்டில் விஜய்யை தவிர சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என த.வெ.க சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும், மாநாட்டில் தொண்டர்கள் அமர 55,000 இருக்கைகள் போடப்படவிருப்பதாகவும், பெண்கள் முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தனி தனி இருக்கைகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. மாநாட்டிற்கு வருபவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கவும் ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. மாநாடு 2 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.